மட்டக்களப்பு சிறைச்சாலை தினத்தினை முன்னிட்டு, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று 12.08.2025 அன்று சிறைச்சாலை வழாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொற்றாநோய் தடுப்புப் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. இ. உதயகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
இம்முகாமில், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எலெக்ட்ரோகார்டியோகிராம் (ECG), குருதிப் பரிசோதனை, மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், சிறைச்சாலை பாவனைக்கென, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தால் சிறைச்சாலைக்கு அன்பளிப்பாக ஒரு நோயாளர் கட்டிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், உயிரியல் வைத்திய பொறியியலாளர் Eng.ஆர். ரவிச்சந்திரன், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. மாதவன், சிறைச்சாலை வைத்தியர் அதிகாரி Dr. ஜே.கே.எச்.பி. பெரேரா மற்றும் பல பொது சுகாதாரப் பரிசோதகர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


