வாஷிங்டன்:
அமெரிக்காவின் மேற்கு பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய ஒரு பாரிய நிலநடுக்கம், ஆயிரக்கணக்கான அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) உருவாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் 8.0 ரிக்டர் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15% வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலநடுக்கம், கடற்கரை பகுதிகளை சுமார் 6.5 அடி திடீரென தாழ்த்தி, சியாட்டில், போர்ட்லேண்ட் போன்ற நகரங்களை சில நிமிடங்களிலேயே மூழ்கடிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த பேரழிவினால் சுமார் 30,000-க்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என்றும், 170,000-க்கும் மேற்பட்ட கட்டமைப்புக்கள் சேதமடையக்கூடும் என்றும், 81 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் எனவும் ஆய்வு எச்சரிக்கிறது.
குறிப்பாக, வொஷிங்டன், வடக்கு ஒரேகான், வடக்கு கலிபோர்னியா போன்ற பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகிய பகுதிகளும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை அபாயங்கள் காரணமாக ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபாயத்தை எதிர்கொள்ள, ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துதல், வலுவான கட்டிடங்களை நிர்மாணித்தல், மற்றும் அவசரகால தயார்நிலை பயிற்சிகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.