கொழும்பு: இலங்கையில் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, 40 நவீன தொழில்நுட்பக் கருவிகள் பேருந்துகளில் நிறுவப்படும் என்றார். இத்தொழில்நுட்பம், சாரதிகள் சோர்வாக இருந்தாலோ, தூக்கக் கலக்கத்தில் இருந்தாலோ, அல்லது வாகனம் ஓட்டும்போது கவனச் சிதறலை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டாலோ, அது உடனடியாக அவர்களை எச்சரிக்கும்.
இது போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சில தனியார் நிறுவனங்களால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் தாமாக முன்வந்துள்ளதாகவும், இது பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.